உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Friday, October 16th, 2020

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள கெமுனு விஜேரத்ன –

“க.பொ.த. உயர்தர பரீட்சைகள் அடுத்த மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்க முடியாது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். உரிய அதிகாரிகளிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தனியார் பேருந்து தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. தனியார் பேருந்து தொழிற்சங்கங்கள் முன்வைத்த திட்டங்களுக்கு அரசாங்கம் முறையான பதில்களையும் அளிக்காமையால் தனியார் பேருந்து தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் தினமும் 21 ஆயிரம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. ஆனால், கொரோனாவின் பின்னர் 12 ஆயிரம்  வரையான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இந்நிலை மேலும் மோசமடையும் சூழ்நிலையே காணப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: