உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் தாதியராக உள்வாங்க முடிவு!

Wednesday, May 30th, 2018

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தாதியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தாதியர் கல்வித் தகமையில் சலுகையொன்றை அறிவித்துள்ளார்.

அதன்படி கல்வித் தராதர உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் சித்தியடைந்திருந்தாலும் அவர்கள் தாதிமார் சேவையில் உள்வாங்கப்படுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். இது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கே அதிகம் செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பேச்சாளர் பிரசன்னா அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் போது 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இது கொழும்பு மாவட்டங்களுக்கும் செல்லுபடியாகும். மிகவும் குறைவான விண்ணப்பங்களே வடக்கிலும் கிழக்கிலுமிருந்து இந்தப் பதவிக்காக கிடைக்கப் பெற்றுள்ளன. தாதியர் பதவிக்காக விண்ணப்பித்த இவர்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியதாயிற்று.

அமைச்சரவையும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 31 ஆயிரம் தாதிகள் பணியாற்றுகின்றனர். 7 ஆயிரம் தாதிமாருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆண் தாதிமார்கள் உள்வாங்கப்படுவதையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

எனினும் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொதுச் சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கத் தலைவரான வணமுருத்தெட்டு ஆனந்ததேரர் இந்தக் கல்வித் தராதர தகைமைக்குறைப்பானது தாதிமார் சேவையின் தரத்தைக் குறைப்பதாக அமையும். நோயாளர்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது என்பதால் சுகாதார அமைச்சு, தாதிமாரின் தரமான சேவைக்குப் பாதகமாகும் விதத்தில் செயற்படக் கூடாது.

30 வருடகாலப் போரால் வடக்கு, கிழக்கின் கல்வியின் தரம் குறைந்துள்ளது. ஆனால் அமைச்சு இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தாதியர்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றார்.

2011 ஆம் ஆண்டு போரின் பின்னர் முன்னைய அரசால் இதுபோன்றதொரு திட்டம் முன்வைக்கப்பட்ட பொழுது தாதியர் சேவையாளர் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதையடுத்து கல்வித்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தான் தாதிமார்களாகப் பயிற்சியளிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: