உயரிய சபையின்  பிரச்சினைகள் இந்த உயரிய சபையிலேயே தீர்க்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Monday, May 28th, 2018

யாழ் மாநகர சபை சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த உயரிய அவையிலேயே விவாதிக்கப்பட்டு அதற்கான முடிவுகள் காணப்படவேண்டுமே தவிர அதனை மாகாணசபையிடம் முறையிட்டு தீர்ப்பதற்கு முயற்சிப்பது இந்த சபையின் அதிகாரத்தை கீழ்மைப்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று காலை 9.00 மணிக்கு சபை முதல்வர் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நியமிக்கப்பட்ட நிலையியல் குழுக்கள் மற்றும் சபை பொறுப்பேற்கப்பட்ட காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவீனங்கள் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதுடன் சபையின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்தச் சபைக்கென 45 உறுப்பினர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்துள்ளனர். இந்த உறுப்பினர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் ஆராயப்பட்டு ஆரோக்கியமான வகையில் தீர்வுகள் காணப்படவேண்டும். இதுவே இந்த உயரிய சபையின் கௌரவமும் கூட.

ஆனால் சில சம்பவங்கள் அவ்வாறு நடைபெறாது வடக்கு மாகாண சபையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதானது இந்த உயரிய சபையின் அதிகாரத்தையும் அதன் கௌரவத்தையும் சிதைத்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அந்தவகையில் இனிவருங் காலங்களில் இந்த உயரிய சபையின்  பிரச்சினைகள் இந்த உயரிய சபையிலேயே விவாதிக்கப்பட்டு தீர்வுகாணப்பட வேண்டும். இங்கு தீர்வு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் அதை வடக்கு மாகாண சபையின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்துவது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: