உதவிக்கரம் நீட்டியது ஈ.பி.டி.பி : நல்லூர் பிரதேச சபையையும் வென்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Wednesday, April 4th, 2018

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இருபது உறுப்பினர்களை கொண்ட யாழ் நல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 5 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி 4 உறுப்பினர்களையும் சுயேட்சைக்குழு 2 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்தி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் சு.வாசுகி ஆகியோருக்கிடையில் பகிரங்கமாக வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தியாகமூர்த்தி 13 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார். அதை தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராசமனோகரன் ஜெயகரன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

Related posts: