உணவு, வாழ்வாதார பாதுகாப்பிற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு – ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டம் அறிவிப்பு!

Saturday, March 25th, 2023

உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு , மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடா அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ்ட குணவர்தனவை சந்தித்து சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக ரீதியான பொருளாதார ஸ்திரத்தன்மை, பசுமை மேம்பாடு , பங்கேற்பு நிர்வாகம் , நீதி, அமைதி மற்றும் சமூக ஒற்றுமை என்ற பிரதான துறைகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டங்கள் 2023 – 2027 க்கு இடைப்பட்ட கால வரையறைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தினால் உணவு , வாழ்வாதார பாதுகாப்பு , பசுமை தொழிநுட்பம் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலு சக்தி தொடர்பான இரு வேலைத்திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 26 000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிரதமர் இதன் போது சுட்க்காட்டினார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏற்கனவே 3000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் எஞ்சியுள்ள 23 000 வீடுகளை நிர்மாணித்து அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.

அதற்கமைய நாட்டில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மண் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். கிராமிய சமூக அடிப்படையிலான நிறுவனங்களில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவை அதிகரிக்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் இரண்டு பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளமைக்கமைய , அதன் கீழ் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக வதிவிடப்பிரதிநிதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: