உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிவிப்பு!

Friday, March 4th, 2022

உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் (Vladimir Putin) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் உடனான தொலைபேசி உரையாடலிலேயே விளாடிமீர் புடின் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்தை கடந்தும் ரஷ்யா மேற்கொண்டுவரும் நிலையில், தென் பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தென்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நகரங்களையும் ரஷ்ய படையினர் கைப்பற்றும் பட்சத்தில் கடலுடனான உக்ரைன் படையினரின் தொடர்பு துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய எல்லையுடன் உள்ள கேந்திர முக்கியத்துவமிக்க மரியுபோல் துறைமுக நகர் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுவரும் நிலையில், மக்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர்.

இதனிடையே தலைநகர் கீவ் தொடர்ந்தும் உக்ரைன் படையினர் வசம் காணப்படுகின்ற போதிலும் பாரிய ஆயுதம் தாங்கிய கவச வாகனத் தொடரணி தலைநகர் கீவ் வை நெருங்கிவருகின்றது.

இந்த நிலையில் உக்ரைனை இராணுவமயமாக்கல் அற்றதாக மாற்றி, அதனை நடுநிலையாக்கும் இலக்கை ரஷ்யா வெற்றிகரமாக எட்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்த உக்ரைன் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், தமது கோரிக்கைகளை மேலும் அதிகமாக்கும் என பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி கலந்துரையாடலில் விளாடிமீர் புடின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான போரை ஆரம்பிப்பதற்கு ரஷ்யா மாத்திரமே காரணம் என இம்மானுவேல் மெக்ரோன் நேற்றுமுன்தினம் வெளியிட்ட கருத்து தொடர்பிலும் தமது உடன்பாடு இன்மையை விளாடிமீர் புடின் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: