உக்கிய தூண்கள் முறிந்து விழும் அபாய நிலையில் – காரைநகர் வீதியில் பயணிக்கும் மக்கள் அச்சம்!

தொலைபேசிச் சேவையை வழங்கக் கடலுக்குள் நிறுவிய தூண்கள் கடல் தண்ணீரால் உக்கிக் காற்று வீசினால் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதால் வீதியால் போக்குவரத்தை மேற்கொள்வோர் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், காரைநகர், பொன்னாலை தொடக்கம் வலந்தலை வரை, சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தினர் கடலுக்குள் தூண்களை நிறுவிக் காரைநகருக்குத் தொலைபேசிச் சேவையை வழங்கி வருகின்றனர்.
கடலுக்குள் நிறுவிய தூண்களில் பல கீழ்ப் பகுதியில் வெடிப்புகள் காணப்படுகின்றது. தூண்களுக்கு உள் இருக்கும் கம்பிகள் கடல் தண்ணீருக்குள் ஊறித் துருப்பிடித்து வெடிப்புடன் காணப்படுகின்றது. வீதிக்கு மிக அருகிலே காணப்படும் தூண்கள் பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயம் உள்ளது இதனால் வீதியில் போகும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண சிறிலங்கா ரெலிகொம் முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சிறிலங்கா ரெலிகொம் தொழில்நுட்ப முகாமையாளர் தெரிவிக்கையில் இந்த தூண்கள் தொடர்பான முறைப்பாடுகள் கடந்த சில வாரங்களுக்கு முதலே எமக்குக் கிடைத்துள்ளன. குறித்த பகுதிக்கு எமது தொழில்நுட்பக் குழுவினரை அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்துள்ளோம். மேலும் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Related posts:
|
|