உக்கிமடையும் ‘போனி’ சூறாவளி – எச்சரிக்கும் வானிலை அவதான மையம் !

Monday, April 29th, 2019

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள ‘போனி’ சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த  சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத் தொகுதி ஏப்ரல் 30ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாகத் திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல், மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 150 மி.மீ அளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் ,  தென், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடல் பிராந்தியங்களில் மழையுடன் கூடிய அதிகரித்த காற்று வீசுவதன் காரணமாக, கிழக்கு மற்றும் தென்கிழக்காக வங்காள விரிக்குடாவில் ஆழ்கடல் பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை கடல்தொழிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: