ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கிடைத்திருக்கும்!

Thursday, November 9th, 2017

கடந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமையால் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை எங்களால் விடுவிக்க முடிந்தது. அதேபோன்று தற்போதைய அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கிடைத்திருக்கும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை(09) யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தங்களது வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்திருந்து அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில் அதற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இந்த நிலையில் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வட- கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

எனினும், பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பை ஏற்று எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், இரு மாகாண சபை உறுப்பினர்களும் மாத்திரமே கலந்து கொண்டார்கள்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத கட்சியைச் சேர்ந்தவர். நான் ஜனாதிபதியுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறி வந்த நாடாளுமன்ற அங்கஜன் இராமநாதன் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

அரசாங்கக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட எமது மக்களின் நியாயமான போராட்டங்களுக்குப் பதில் சொல்ல முடியாத நிலைமையே காணப்படுகிறது என்றார்.

Related posts:

அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!
கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை - அரச வைத்திய அதிகாரிக...
சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...