ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, March 16th, 2021

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிடுகையில் – ,“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறந்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் எதிர்காலத்தில் தலைத்தூக்காத அளவிற்கு பல விடயங்களை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

அத்துடன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சுயாதீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

அறிக்கையின் யோசனைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: