ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் அரசாங்கம் எனும் வகையில், அனைவரது வேண்டுகோள்களையும் மதிக்கின்றோம். 30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த நாம், இனியும் நாட்டில் தீவிரவாதத்திற்கோ பயங்கரவாதத்திற்கோ ஒருபோதும் அனுமதியளிக்கப்போவதில்லை.

ஈஸ்டர் தாக்குதல்தான் கடந்த காலங்களில் உலகிலேயே நடத்தப்பட்ட மிகவும் மோசமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகிறது. நாம் எப்.பி.ஐ. மற்றும் அவுஸ்ரேலியன் பெடரல் பொலிஸாருடன் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறோம்.

சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி எவரையும் தப்பிக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணைகளை தீவிரப்படுத்துகிறோம்.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதை நாம் சபையில் தெரியப்படுத்துகிறோம்.

சாட்சிகளை நாம் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதேநேரம் சில சாட்சியங்களை இரசாயணப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறான வழிமுறைகள் இருப்பதால்தான் வழக்குத் தாக்கல் செய்ய சிறிது காலம் எடுக்கின்றது. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விரைவில் அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்வோம்.

மேலும் இதுவரை 704 பேர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகள் மற்றும் அமெரிக்காவின் விசாரணைகளுக்கு இணங்க, நௌபர் மௌலவியே தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத சிந்தனையை முதன் முதலில் இலங்கைக்குக் கொண்டுவந்து, 2016 ஆம் ஆண்டு சஹ்ரானை அந்தச் சிந்தனைக்குள் கொண்டுவந்தவர் இவர்தான். இவர்தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதானி என எப்.பி.ஐ.உம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு, இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர்களுக்கும் தொடர்புள்ளது. அந்தவகையில், இலங்கையுடன் தொடர்புடைய அவுஸ்திரேலிய பிரஜையொருவர் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, மாலைதீவு பிரஜைகள் நால்வரையும் கண்டறிந்துள்ளோம். இவை தொடர்பாக நாம் தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வாளர்களுடன் இணைந்து தீவிரமான விசாரணைகளை நடத்திக் கொண்டுதான் வருகிறோம்.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: