ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் – அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Monday, March 8th, 2021

அலட்சியம் காரணமாக 2019 ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க தவறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் ஜூன் 7, 8 மற்றும் 9 திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் குறித்த மனுக்கள் தலைமை நீதியரசர் தலைமையிலான ஆறு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சில அமைச்சர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதிவாதிகள் சார்பாக சட்டமா அதிபர் நீதிமன்றில் முன்னிலையாவாரா என்பது தொடர்பான முடிவு எட்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்..

மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருப்பினும் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலையான சட்டத்தரணிகள், குறித்த கால அவகாசத்திற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததுடன் தாமதத்தின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் மேலும் அநீதியை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் இருதரப்பு பரிசீலனைகளையும் ஆராய்ந்த நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, 12 மனுக்கள் மீதான விசாரணைகளை ஜூன் 7, 8, 9 ஆகிய திகதிகளில் எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: