ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமானது நெடுந்தீவு பிரதேச சபை!

Tuesday, February 25th, 2020

மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்காது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் முடக்கி வைக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சியை நீண்டகால இழுபறிக்கு மத்தியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது.

2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுயேட்சை ஆகியவற்றின் ஆதரவுடன் நெடுந்தீவு பிரதேசசபையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆட்சியமைத்திருந்தது.

அதன் பின்னர் சபையின் உபதலைவர் இயற்கை மரணமடைந்ததை அடுத்து இரண்டு வருடங்களாக சபைக்கான உபதலைவர் தெரியப்படாது வினைத்திறனற்ற செயற்பாடுகளுடன் காணப்பட்டதால் நெடுந்தீவு மக்களால் சபை அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையில் தவிசாளர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டு அவர்சார் ரெலோ அமைப்பால் வெளியேற்றப்பட்டதை அடுத்து இன்றைய தினம் புதிய தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றிபெற்று ஆட்சியை தன்வசமாக்கியுள்ளது.

இதன்போது தவிசாளராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் நல்லதம்பி சசிகுமார் ஏகமனதாக தெரிவானார்.
அத்திடன் உப தவிசாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜ் அவர்களும் தெரிவாகினர்.

நெடுந்தீவு பிரதேசசபையானது 13 உறுப்பினர்களைகொண்ட சபையாகும். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 06 ஆசனங்களையும், தமிழ்தேசியக்கூட்டமைப்பு நான்குஆசனங்களையும், சுயேட்சை இரண்டு ஆசனங்களையும் ,ஐக்கியதேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: