ஈரோஸ் அமைப்பின் பெயரால் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் – செயலாளர் நாயகம் பிரபாகரன் வேண்டுகோள்.

Saturday, November 12th, 2016

ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் மக்களைஏமாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவேதமிழ்பேசும் மக்கள் இவ்விடயத்தில் மோசடிக்காரர்களுக்கு இடமளிக்கமாலும், அவர்களிடம் ஏமாந்துபோகாமலும் இருக்கவேண்டும என்று ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஈரோஸ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1990ஆம் ஆண்டுவரை ஈழப் போராட்டத்தில் ஈழ விடுதலைக்காக கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தது. தலைவர் பாலகுமாரன் ஈரோஸ் இயக்கத்தை கலைத்துவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து விட்டபிறகும், ஈரோஸ் இயக்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் பாதுகாப்பதிலும், அதன் இலட்சியப் பாதையை தொடர்வதிலும் முன்னின்று உழைத்திருக்கின்றேன்.

அதற்காக நான் பல்வேறு தாக்குதல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றேன். இப்போது மீண்டும் பாரியமுயற்சியோடு ஈரோஸ் அமைப்பை கட்டிவளர்ப்பதிலும், பழைய ஈரோஸ் உறுப்பினர்களை இணைத்து தமிழ் மக்களுக்கு சேவை செய்வதிலும் தீவிரமாக ஈடுபாட்டு வருகின்றேன்.

ஆரம்பத்தில் ஈரோஸ் அமைப்பில் நிதிப் பொறுப்புவகித்த இராஜேந்திரா என்பவர் பெருமளவு நிதியுடன் தலைமறைவாகியிருந்தார். 2008 ஆண்டு நாம் ஈரோஸ் அமைப்பை மீளக் கட்டியெழுப்பியபோது, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய இராஜேந்திரா என்பவர் வவுனியாவில் அரசியல் பொறுப்பாளராக இருந்து காணிகள் அபகரிப்புச் செய்தும், பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் இருந்த எமது தமிழ் மக்களை வெளியில் எடுத்துவிடுவதாகக் கூறி பல இலட்சம் பணத்தை சுருட்டியவருமான துஸ்யந்தன் என்பவரையும் மீண்டும் இணைத்துக் கொண்டு தற்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் மீண்டும் மக்களை ஏமாற்றவும்,மோசடிகளில் ஈடுபடவும் தொடங்கியிருக்கின்றார்கள்.

கடந்த 26 வருடங்களாக ஈரோஸ் அமைப்புடன் எவ்விதத் தொடர்புகளையும் கொண்டிருக்காமல்,தற்போது எனது கடுமையான முயற்சியால் ஈரோஸ் அமைப்பு தலைதூக்கத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில், இந்த மோசடிக்காரர்களுடன், முன்னர் எமது அமைப்புடன் இருந்து சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காக எம்மால் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யோகராஜா என்பவரையும் இணைத்துக்கொண்டு இந்த மூவரும் இயங்கி வருவதாக பொதுமக்கள் எனது கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

எனவே ஈரோஸ் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி எவரேனும் மோசடியில் ஈடுபட்டால் அது தொடர்பில் மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறும், எமது ஈரோஸ் அமைப்பானது, ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாகவே தற்போது மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றது என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கின்றேன் என்றும் ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

timthumb

Related posts: