இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்பினருக்கு ஆலோசனை!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை இலங்கை டிப்போ ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்.
பொதுபோக்குவரத்து சேவையில் தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டால் முழு நாடும் ஸ்தம்பிதமடையும் ஆகவே பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர் தொழிற்சங்கத்தினரிடம் வலியுறுத்தினார்.
சேவைக்கு சமுகமளிக்க தேவையான எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நேற்று காலை முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும்,தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நேற்று மாலை போக்குவரத்து அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதாவது –
கொவிட் -19 பெருந்தொற்று தாக்கத்தின் போதும்,பொது போக்குவரத்து சேவையின் ஏனைய தரப்பினர் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்ட போதும் இலங்கை அரச பேரூந்து சபையின் ஊழியர்கள் பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது.
நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பு எந்தளவிற்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.பொது போக்குவரத்துதுறை எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.தனியார் பேரூந்து சேவை வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அரச பேரூந்துகளும் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டால் முழு நாடும் ஸ்தம்பிதடையும்.
ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்கும் போது எதிர்கொள்ளும் நெருக்கடியினை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது எரிபொருளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையினை கருத்திற்கொண்டு பொதுமக்களின் நலனுக்காக பணிபுறக்கணிப்பில் ஈடுப்படாமல் சேவையில் ஈடுப்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். கையிருப்பில் உள்ள குறைந்தப்பட்ச எரிபொருளை போக்குவரத்து சேவை ஊழியர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை டிப்போ ஊடாக ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கின்சிலி ரணவக்க ஆகியோருக்கு போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|