இஸ்லாமிய மக்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாக புனித ரமழான் மாதம் அமைகின்றது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024

புனித ரமழான் மாதமானது, இஸ்லாமிய மக்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சகல இஸ்லாமியர்களுக்கும் ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளமையினால் தாம் ஆனந்தமடைவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமனித முன்னேற்றத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டுச் சமூக விழுமியங்களை உயர்த்துவதற்காக உருவாக்கப்படும் இவ்வாறான விடயங்கள், வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சிக்கான அடிப்படையை வழங்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரமழான் என்பது இஸ்லாம் மதத்தின் ஆன்மீகம் மட்டுமன்றி மனித மற்றும் சமூக விழுமியங்களை அங்கீகரிக்கின்ற ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புனித ரமழான் பெருநாளை, உலகிற்கு தர்மம் மற்றும் சமத்துவச் செய்தியை எடுத்துரைக்கும் மிக முக்கியமான சமய விழா எனவும் குறிப்பிட முடியும்.

இந்த தேர்தல் ஆண்டில் சகோதரத்துவ பந்தத்தை பலவீனப்படுத்த பல்வேறுபட்ட இனவாதிகள் முயற்சிக்கலாம்.

எனினும் அந்த சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் இடமளிக்கக் கூடாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: