இழுவைமடி மீன்பிடித் தடைச்சட்டத்தை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை

Saturday, October 14th, 2017

வடக்குமாகாண மீனவர்கள் யுத்தகாலம்முதல் இன்று வரை தமது தொழில் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் வி.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

கடற்படையினரின் நெருக்கு வாரங்கள் மற்றும் இந்தியக் கடற்தொழிலாளர்களின் அத்து மீறல்கள் என அவர்களின் பிரச்சினைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. குறிப்பாக எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன் வளத்தை அள்ளிச் செல்கின்றனர் என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உரிய அரசு இது தொடர்பில் காலத்துக்குக் காலம் நடவடிக்கை எடுத்தாலும் அவை பயனளிப்பதில்லை என்றும் மீனவர்கள் தரப்பில் விசனிக்கப்படுகின்றது. இந்த வகையில் இழுவைமடி மீன்பிடித்தடைச் சட்டமும் பிசுபிசுத்துப்போயுள்ளது. இழுவைமடி மீன்பிடி தொடர்பில் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதனைக் கட்டுப்படுத்துவதில்லை.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவாகக் காணப்பட்டது. எனினும் எமது அதிகாரிகள் அதனை சரிவர நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் ஆரம்பித்துள்ளன. இதனால் எமது கடல்வளம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதேவேளை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை புதுடில்லியில் ஆராயப்படவுள்ளது.

இரு நாட்டு அமைச்சு மட்டப் பிரதிநிதிகள் இது குறித்துப் பேசவுள்ளனர். எமது பிரதிநிதிகள் இந்திய அரசுக்கும் அங்குள்ளவர்களுக்கும் இழுவைமடிச் சட்டவரைபு பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். அது நிறைவேற்றப்பட்டதையும் நடைமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்ட போது இலங்கையில் இழுவைமடி மீன்பிடி முறைமை தடைசட்டத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கலாம் என ஆலோசித்து வருகின்றோம் – என்றார்.

Related posts: