இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் – பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்து!
Tuesday, December 20th, 2022அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதில் அரச அதிகாரிகள் பெரும் செல்வாக்குச் செலுத்த முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக அரச உத்தியோகத்தர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி சமுத்திரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டுக் குழுவின் வருடாந்த சிநேகபூர்வ ஒன்றுகூடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி பல சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொறுப்பை ஏற்று தற்போது முறையாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக 2012ஆம் ஆண்டு குழுவினர் ஆற்றிய பணியை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பாராட்டியிருந்தார்.
“Be the impact” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டு குழுவினரின் வருடாந்த சிநேகபூர்வ ஒன்றுகூடலில் அதன் தலைவர் சுரங்க ரணசிங்க உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பணியாற்றி வரும் 2012 ஆம் ஆண்டுக் குழுவின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|