இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Monday, August 2nd, 2021

இலங்கை வங்கியின் 82 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று அலரி மாளிகையில் வைத்து திறந்துவைக்கப்பட்டது.

இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் இவ்விசேட பிரிவை திறந்துவைத்தார்.

இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தின் வணிக சேவை பிரிவினுள் இந்த விசேட ஏற்றுமதி பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் பொது முகாமையாளராக கடமையாற்றும் D.P.K.குணசேகர இலங்கை வங்கியின் சிரேஷ்ட வங்கி சேவையாளர் என்ற விருதை பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

அரச நிதிக் கொள்கைக்கு அமைய அந்தந்த அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு எப்போதும் உறுதியாக செயற்படும் இலங்கை வஙகி, தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு  திட்டத்துடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை கட்டியெழுப்புவதற்காக ‘திவி உதான’ கடன் திட்டத்தையும், சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ‘சஷ்ரிக’ கடன் திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளதாக இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2014ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாகக் காணப்பட்டது. அரச வங்கி வட்டி விகிதம் 8-9 சதவீதம் என்ற ஒற்றை இலக்கத்திலேயே காணப்பட்டது. சிறந்த பொருளாதார வளர்ச்சி காணப்பட்ட நாடொன்றையே கடந்த அரசாங்கம் பொறுப்பேற்றது. எனினும் 2019ஆம் ஆண்டளவில் வங்கி வட்டி வீதம் 15-16 சதவீதம் வரை அதிகரித்து 2014ஆம் ஆண்டில் ஒற்றை இலக்கத்தில் காணப்பட்ட வரி விகிதமும் 15 சதவீதமாக அதிகரித்தது.

இன்று ஆரம்பித்த விசேட ஏற்றுமதி பிரிவு நாட்டின் சிறு, நடுத்தர மற்றும் பாரியளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் நிதிசாரா அனைத்து வசதிகளையும் வழங்கி அரசாங்கத்தின் உள்ளூர் ஏற்றுமதியாளர்களை மேம்படுத்தும் செயற்பாட்டிற்கு இலங்கை வங்கி உறுதியாக விளங்கும் எனவும் காஞ்சன ரத்வத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: