இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டுவதாக ஐநாவில் சீனா அறிவிப்பு / தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கையில் முன்னேற்றம் காணப்படாமை குறித்து இந்தியா கவலை!

Tuesday, September 13th, 2022

நேற்றையதினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமுக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என  மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னேற்றம் எதுவும் காணப்படாமை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

அத்துடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்று இந்தியா குறிப்பிடுள்ளது..

அண்டை தீவு தேசத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த தனது நிலையான பார்வையானது, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வைக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும் என்று இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ளனர்.

அத்துடன் தூதுக்குழுவினர் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின்மையில் இருந்து விடுபடுவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுத்தது.

அதேநேரம் இலங்கை தொடர்பான அறிக்கைக்காக, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நன்றியை தெரிவித்தது.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான தங்கள் உறுதிப்பாட்டையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சூழ்நிலைகளில் உள்ள நபர்கள் மற்றும் குழுக்கள் மற்றும் அனைவரின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை திறம்பட மற்றும் சமமாக நிறைவேற்றுவதற்கான அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்பதாக

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

நெற்று பிற்பகல் தேசிய நேரத்திற்கு அமைய 12.30 அளவில் அமர்வு ஆரம்பமாகியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷீப் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது சபையில் உரையாற்றுகையில் 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளதென அலி சப்ரி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, யுக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன.

இந்த தீர்மானத்திற்கு எதிராக பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன.

இதேவேளை, இந்தியா, பஹ்ரைன், புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: