இலங்கை போக்குவரத்து சபையை மூடுமாறு தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!

இலங்கை போக்குவரத்து சபையை மூடுமாறும், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை தனியார் பஸ் உரிமையாளர்களால் நிரப்ப முடியுமெனவும் நகரங்களுக்கிடையிலான தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 20,000 தனியார் பஸ்கள் சேவையிலிருப்பதால் இ.போ சபைக்கு மேலதிகமாக 3000 பஸ்களை கொண்டுவர தேவையில்லையெனவும் , மீறிகொண்டுவந்தால் அதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியவில் நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில்: இ.போ.சபைக்காக நாட்டு மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகின்றது. எனவே இலங்கை .போ. சபையை மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதனால் ஏற்படும் வெற்றிடத்தை தனியார் உரிமையாளர்களால் நிரப்ப முடியும். அதுமட்டுமின்றி, இ.போ.சபையினரால் மேற்கொள்ளப்படும் விசேட மக்கள் நலசேவைகளையும், தனியார் துறையினரால் வழங்கமுடியும் எனவே இந்த நாட்டின் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக தனியார் துறையினரிடம் ஒப்படைக்க அரசாங்கம் முன்வரவேண்டும்.
தனியார் பஸ்கள் குறிப்பிட்ட கால அட்டவணைக்கு ஏற்ப செயற்படுகின்றன. ஆனால் இ.போ. சபைக்கு சொந்தமான பஸ்கள் எந்தவித நேர கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக இயங்குகின்றன.உதாரணமாக தனியார் பஸ்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது இ.போ. ச. பஸ்களும் பயணத்தை ஆரம்பிக்கின்றன. இதனால் போட்டித்தன்மை அதிகரித்து, விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
Related posts:
|
|