இலங்கை திரைப்படத்துறைக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து ஈராண்டுகள் விலக்களிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை!

Tuesday, January 12th, 2021

இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை திரைப்படத்துறைக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கை திரைப்படத்துறையை சார்ந்த கலைஞர்கள் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களில் –

கொரோனா தொற்றுக்கு மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறையை பாதுகாக்கும் நோக்கில் இரண்டு ஆண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு திரைப்படத்துறை சார்ந்தவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை இரண்டு ஆண்டு காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இத்தினத்தில் இது குறித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு திரைப்படத்துறையில் நாடளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படும். 2023 ஆண்டுமுதல் திரைப்படத்துறைக்கான பொழுதுபோக்கு வரியை 7.5 சதவீதமாக குறைப்பதற்கும் இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுவரை 5 சதவீதம் முதல் 25 சதவீதம்வரை பல்வேறு சதவீதங்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களினால் பொழுதுபோக்கு வரி அறவிடப்பட்டது.

இப்புதிய ஒப்புதலுக்கமைய முழு நாட்டிற்கும் ஒரு பொழுதுபோக்கு வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக குறித்த துறைசார் பிரதிநிதிகள் கடந்த 8 ஆம் திகதி பிரதமரை சந்தித்து கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இதனடிப்படையிலேயே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: