இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தது கிடையாது – இந்தியாவுடனான உறவு அனைத்துவகைகளிலும் மிகவும் விசேடமானது – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தல் என்பது இல்லை. நாங்கள் அனைத்து நண்பர்களுடனும் சுமூகமான உறவை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவுடனான உறவு அனைத்துவகைகளிலும் மிகவும் விசேடமானது, அதற்கு ஒரளவிற்கு வரலாறு புவியியல் பொருளாதாரம் தொடர்பான சூழ்நிலைகள் காரணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை என வரும்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீனா என்ற கேள்வி ஒரு விவகாரமாக மாறிவிடுகின்றது. என பேராசிரியர் பீரிஸ்’ இந்து’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
இருநாடுகளினதும் தலைவிதிகளும் பிரிக்கமுடியாதவாறு பின்னிப்பிணைந்துள்ளன, இது மனப்பூர்வமான தெரிவு சம்பந்தமான விடயமும் கூட – விதி எங்களை ஒன்றிணைக்கவில்லை. மேலும் ஒருங்கிணைந்து செயற்படுதல் என்பது இருநாடுகளிற்கும் வெற்றிகரமானதாக அமையும் என்ற உணர்வு இருநாடுகளிலும் காணப்படுகின்றது,
கொரோனா எங்களை தாக்கியவேளை எங்கள் நாட்டிற்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவே எங்களின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளி, இலங்கையில் அதிகளவில் முதலீடு செய்யும் மூன்றாவது நாடும் இந்தியாதான்.
இதேநேரம் சீனாவுடன் எங்களிற்கு உறவுள்ளது, புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் காணப்படுகின்றோம், எங்களின் துறைமுகங்கள் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியில் சீனா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனை நாங்கள் பாராட்டுகின்றோம் ஆனால் இந்தியாவை விட்டுக்கொடுத்து அல்ல,
மேலும் இலங்கையின் எந்த பகுதியையும் இந்தியாவிற்கோ அல்லது எந்த நண்பர்களிற்கு எதிராக பயன்படுத்துவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் மீண்டும் மீண்டும் வழங்கிவந்துள்ளோம்.
எனவே இவ்விடயம் தொடர்பில் உண்மையில் பயப்படவேண்டிய அவசியம் எதுவும் இல்லை, எந்த தர்க்க அடிப்படையும் இல்லாத அச்சம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிகாரப்பகிர்வு மற்றும் 13 வது திருத்தம் தொடர்பில் இந்தியா வகிபாகமொன்றை கொண்டிருக்க வேண்டுமா என கேட்கப்பட்டபோது
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் – இல்லை, நான் அப்படிச் சொல்லமாட்டேன். இந்தியா கடந்த காலத்தில் ஆர்வம் காட்டியது. ஆனால் பிரதான பொறுப்பு, வெளிப்படையாக இலங்கைக்கே உள்ளது, அத்துடன் இலங்கை அரசியல் கட்சிகள் முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபட வேண்டுமென கூறியுள்ளார்.
மேலும் ,தற்போது, ஒரு விரிவான அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது நிபுணர்கள் குழுவொன்று நகல் வரைபை தயார் செய்துவருகிறது, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தயார்ப் படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு விடயம் அந்த வரைவில் சந்தேகத்திற்கு இடமின்றி கவனத்தில் கொள்ளப்படும் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஆனால் எதைச் செய்தாலும் நாட்டில் போதியளவுக்கு ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்.,
ஒரு பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால், அதை களத்தில் செயற்படுத்துவது கடினமாக இருக்கும். எனவே, நாங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச முயற்சிப்போம் மற்றும் நீண்டகாலமாக இருந்து வரும் ஏற்பாடுகள் குறித்து புரிந்து கொள்ள முயற்சிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மிகச்சமீபத்தில் இருதரப்பு மீனவர்கள் மத்தியிலான மோதலின் காரணமாக இரு மீனவர்கள் உயிரிழந்தார்கள், இந்த விடயத்தில் முன்னோக்கி நகர்வது அல்லது தீர்வு குறித்து இந்தியாவுடன் ஏதாவது ஆராய்ந்துள்ளீர்களா? என கேட்கப்பட்டதற்கு
இந்திய மீனவர்களிற்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து மீள பயிற்சியளிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன- இருதரப்பிலும் உள்ள மீனவர்கள் கூட்டுறவுச்சங்கங்கள் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டது.
இதேநேரம்’ உடனடியாக செய்யவேண்டிய விடயங்கள் உள்ளன. இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பதற்றமான விடயமாக மீனவர் விவகாரம் காணப்படுகின்றது என நான் தெரிவிக்க விரும்புகின்றேன்- தொடர்ச்சியாக எரிச்சலூட்டும் விடயமாகவும் இது காணப்படுகின்றது.
இதற்கு உண்மையாகவே தீர்வை காணவேண்டும், இருதரப்பிலும் நல்லெண்ணம் உள்ளது, இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துரைத்து தீர்வை காண்பதற்கு எனது இந்திய விஜயம் ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|