இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

Friday, May 13th, 2022

பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க,  இன்று முற்பகல் பிரதமராக தனது கடமைகளை ஆரம்பிததுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்.

நாடுகடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறையையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேரிட்டது.

அதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்த போதிலும், பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அந்த யோசனைக்கு சாதகமாக பதிலளிக்கவில்லை.

அதன் பின்னர் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடினார்.

இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவியை ஏற்குமாறு அவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த பிரேரணையை நிராகரித்ததன் பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இரவு ரணில் விக்ரமசிங்கவை கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பிரதமர் அலுவலகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்து கலந்துரையாடலை முடித்துக்கொண்டனர்.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை 6.34 அளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆசிரியர் ஆட்சேர்ப்புன்னு வடக்கில் நேர்முகத் தேர்வு இந்த மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறும்!
இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் - ஜனாதிபத...
நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் ...