இலங்கை – சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்து!

Friday, April 30th, 2021

சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் தலைமையிலான சீன தூதுக்குழுவுடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹோங், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் குணரத்ன, பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய இணைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா இலங்கையின் வரலாற்று ரீதியில் நட்பு நாடாக இருந்து வருகின்றது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், அண்மையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் ஃபெங், நடைமுறை சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திடப்பட்டதுடன் இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் சீன தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிவந்த ஜெனரல் ஃபெங் ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இதேவேளை, சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமும் மாணவர் சங்கத்தின் தலைவரும் ஸ்தாபக உறுப்பினருமான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் மேற்படி இணையதளத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: