இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது!

பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூகவலைத்தளம் ஊடாக தனக்கு அறிமுகமான 29 வயது பெண் ஒருவரையே, அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் சிட்னியில் உள்ள குடியிருப்பொன்றில் நடந்துள்ளது.
“கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை 1 மணியளவில் தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் ஸ்ட்ரீட் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, பிராந்திய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் காவல்துறையினர் கூட்டு விசாரணையை தொடங்கினர். அதனடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (6) அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்த இலங்கை அணி தனுஷ்க குணதிலக்க இல்லாமலேயே அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியிருந்தார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
எனினும், தனுஷ்க குணதிலக்கவை மீண்டும் நாட்டுக்கு அனுப்பாமல் அவரை கிரிக்கெட் அணி நிர்வாகம், தம்முடனேயே வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ்க குணதிலக்க இதேபோன்றதொரு குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.
இலங்கையில் நோர்வே பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தனுஷ்கவையும் அவரது நண்பர் ஒருவரையும் காவல்துறையினர் விசாரித்தனர்.
எனினும், அவரது நண்பர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தனுஷ்கவுக்கு சம்பவத்துடன் தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|