இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கில் உதயம்!

Saturday, September 11th, 2021

வடமாகாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான புதிய தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது.

இதன்மூலம் வடக்கு மாகாண சபைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு தொழிற்சங்கம் முதன் முறையாக  உருவாக்கப்பட்டுள்ளது.

இது “இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் – வடக்கு மாகாணம் ” எனும் பெயரில் தொழிற்சங்கமாக தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவராக செல்லத்துரை செல்வானந்தமும் ,செயலாளராக சிவலிங்கம் பிரேமகுமாரும் பொருளாளராக சிவலோகநாதன் சுரேந்திரனும் உபதலைவராக பாக்கியநாதர்  தியோஜினஸ் மற்றும் உபசெயலாளராக அரவீந்திரநாதன்  குகன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மொத்தமாக 9 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக சபையின் கீழ்  இத்தொழிற்சங்கமானது செயற்பட ஆரம்பித்து உள்ளது.

இதன்மூலம் வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றிவரும் அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்கு விரைந்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன் வேலைப்பகிர்வு, வருடாந்த இடமாற்றங்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் நலன் சார்ந்த விடயங்களும் எவ்வித பாகுபாடுகளுமற்ற நிலையில் தீர்வுகளை எட்டக்கூடியதாக அமையும்.

மேலும் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட காலம்முதல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான  பதவி உயர்வுகள் உரிய காலங்களில்  வழங்கப்படாமல் சுமார் 12 வருடங்களுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு இன்று வரை  வெற்றிடங்களாகவே உள்ள சேவைமூப்பு அடிப்படையிலான விசேட தரத்திற்கான பதவியுயர்வுகளை மிக விரைவாக நிரப்புவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது..

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள இத்தொழிற்சங்கத்தில் வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றிவரும் அனைத்து நிரந்தர சிவில், மின்சார, மற்றும் இயந்திரவியல் தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் இணைந்து கொள்ள முடியும்.

மேலும் வடகிழக்கு மாகாணமாக இருந்த காலத்தில் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு என்று தனியான தொழிற்சங்கம் ஒன்று இயங்கி வந்தது.   வடக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு  செயற்படத் தொடங்கியதன் பின்னர் முதற்தடவையாக தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மட்டுமேயான தனித்துவமானதொரு தொழிற்சங்கமாக உருவாகி இருப்பது  குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக ஆளுனர், பிரதம செயலாளர் உட்பட வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அனைத்துத் திணைக்களங்களுக்கும் கடிதமூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: