இலங்கையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகக் கொள்ளுங்கள் – போவோ மன்ற உறுப்பு நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

Wednesday, April 21st, 2021

சாதகமான வரி அமைப்பு மற்றும் ஏனைய சலுகைகள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான கொள்கையை இலங்கையில் நாம் உருவாக்கி வருகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச குறித்த இலக்கை அடைந்து கொள்வதற்கு சர்வதேச பங்காளர்களின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் போவோ மன்ற உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவின் ஹைனேன்ஹி, போவோ நகரத்தில் நடைபெறுகின்ற போவோ (BOAO) மாநாட்டில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த ஜனாதிபதி –

29 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் போவோ மன்றத்தின் தலைமையகம் சீனாவாகும். “மாறிவரும் உலகம்: உலகளாவிய ஆளுகையை வலுப்படுத்தவும் பட்டை மற்றும் பாதை கூட்டுறவை மேம்படுத்தவும் கைகோர்ப்போம்.” என்ற கருப்பொருளில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் ஆசியாவின் உலக அமைதி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கு பங்களிப்பதற்கு குறித்த மன்றம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான கொள்கையை இலங்கையில் நாம் உருவாக்கியுள்ளதாகவும் இந்த இலக்கை அடைந்துகொள்வதற்கு சர்வதேச பங்காளர்களின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் அதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்களவில் உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்..

இதேவேளை சீன மக்கள் குடியரசு “போவோ” மன்றத்தின் மூலம் செயற்படுத்தி வருகின்ற நடவடிக்கைகளை பாராட்டிய ஜனாதிபதி, பல நூற்றாண்டுகால பலமான வரலாற்றின் ஊடாக இலங்கையும் சீனாவும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன என்றும் நினைவுகூர்ந்தார்.

இலங்கை ஆசிய வலயத்தின் அண்டைய நாடுகளுடனும் மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வெளியுறவுக் கொள்கையை பேணிவருகின்றது. அது சமமான மற்றும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்பாடுகள் “சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்திக் கொள்கை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்  ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் சர்வதேச பகிரப்பட்ட கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கிடையில் நியாயமான சமநிலையை பேணுவது அவசியம் என்றும் தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்,  சமநிலையை பேணுவதில் சுயாதீன அரசுகளின் இறையாண்மையை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளளார்

இந்த மாநாட்டில் நியுசிலாந்து, மொங்கோலியா, புருனை, சிங்கப்பூர், வியட்னாம், பங்களாதேஷ், கம்போடியா உள்ளிட்ட 15 நாடுகளின் அரச தலைவர்கள் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மன்றத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: