இலங்கையை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா – இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவிப்பு!

Friday, April 15th, 2022

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியா உணவு மற்றும் எரிபொருளை வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

‘இந்தியக் கொள்கைகளில் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவ வேண்டும். என்பது தெளிவாக உள்ளது. இலங்கையின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதற்கு பல காரணங்கள் காணப்படலாம்.

ஆனால் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை சமாளிக்க உணவு மற்றும் எரிபொருளை நாங்கள் வழங்குகிறோம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்பதாக பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை மக்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டம் காரணமாக, அரசாங்க அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

இதேவேளை இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா கொழும்பிற்கு வழங்கிய நிதியுதவியானது இலங்கையின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதற்கு உதவி வருகின்றது.

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீண்ட மின்வெட்டு, விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியன தொடர்கின்றன.

அந்நிய செலாவணியின் பற்றாக்குறையால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன் வெளிநாட்டுக் கடன்கள் செலுத்த வேண்டிய காலமும் நெருங்கி வருகின்றது. சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியால் இலங்கை அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், புதுடில்லி கொழும்புக்கு இரண்டு கட்டங்களாக அத்தியாவச பொருட்களுக்காக  நிதியுதவியளித்துள்ளது.

கடந்த மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியிடம், ‘இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், இலங்கை பொருளாதாரத்திற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய மாதங்களில் இரண்டு முறை இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் இந்தியா இலங்கை விடயத்தில் முக்கியப் பங்கை வகிக்கும் என கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எரிசக்தி பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக புதுடில்லி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொழும்பிற்கு குறுகிய காலக்கடனாக வழங்கியுள்ளது.

அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், 2021 நவம்பரில், இரசாயன உரங்களின் இறக்குமதியை இலங்கை அரசாங்கம் நிறுத்தியதால், இந்தியா 100 தொன் நனோ நைற்றிஜன் திரவ உரங்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

கடந்த 50 நாட்களில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த எரிபொருள், 200,000 மெற்றிக் தொன் ஆகும். அத்துடன் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால், 40,000 மெற்றிக் தொன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய நிதிக் கடன் வசதியின் கீழ் இந்தியாவில் இருந்து அரிசி விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து அரசி அனுப்பி வைக்கப்படுவதால் கொழும்பில் அரசியின் விலையைகக் கட்டுப்படுத்துவதற்கு உதவுதாக இருக்கும். இலங்கையில் அரசியின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை அங்கு மேலும் அமைதியின்மையை அதிகரிப்பதாகவுள்ளது.

‘இலங்கைக்கு அரிசியை வழங்கும் பொருட்டு தெற்கு துறைமுகங்களில் அரிசி ஏற்றும் பணி தொடங்கியுள்ளது’ என இந்திய கடன் வசதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதியை முன்னெடுக்கும் பட்டாபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.வி.கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: