இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி – வட பகுதியை தாக்கும் அபாயம்!

Wednesday, November 25th, 2020

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணியளில் பாரிய சூறாவளியாக மாறியுள்ளது.

அது இலங்கையின் காங்கேசன்துறைக்கு கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 82.1E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் மிகப்பெரிய சூறாவளியாக மாறி நாட்டின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் தமிழ் நாடு கரை ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கட்டமைப்பின் அழுத்தம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தில் இடைக்கிடையே 60 – 80 கிலோ மீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

வடக்கு, வட மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணத்தில் வானம் முகில்களினால் மூடிய நிலையில் காணப்படும்.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும், குருநாகல் மற்றும் காலி மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மாகாணத்தில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.

கடும் காற்றினால் ஏற்படும் ஆபத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: