இலங்கையை சிறந்த பாடசாலை கட்டமைப்பை கொண்ட நாடாக மாற்றுவேன் – பிரதமர்!

Friday, July 5th, 2019

கல்வி அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றில் பூரணத்துவம் அடைந்த தெற்காசியாவின் சிறந்த பாடசாலை கட்டமைப்பை கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதே தமது நோக்கம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 250 பாடசாலைகளை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் நிமித்தம், பேராதனை தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் இதனைக் கூறினார்.

கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களாலும் பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடிவதில்லை. ஆனால் பல்கலைக்கழகத்துக்கு செல்லாத பலர் வேறு துறைகளில் திறமையானவர்களாக உள்ளனர்.

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் பலர் பல்கலைக்கழகம் செல்லாதவர்கள். பல்கலைக்கழகம் செல்லாத பல கலைஞர்கள் இருக்கின்றனர்.

எனவே பாடசாலைகளில் கல்வி அறிவைப் பெற்று, தமது திறமைகளை முன்னேற்றக்கூடிய கல்வித் திட்டமே தேவை என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தற்போது கல்வித்துறையில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக புதிய கல்விச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

Related posts: