இலங்கையுடனான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதியிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வருகைதந்துள்ள இரண்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சாற்றிதழ் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.

இலங்கைக்கான ஜப்பான் மற்றும் தாய்லாந்துத் தூதுவர்களும் இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகருமே, இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

அதன்படி, இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவராக – பொஜ் ஹான்பொலும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகராக சன்டில் எட்வின் சல்க்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவராக -ஹிடேகி மிஸுகொஷியும் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை மற்றும் தமது நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதியிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் தமது அரசாங்கம் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கும் விதத்தைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு, அந்நாடுகளின் முதலீட்டாளர்களுக்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் பசுமை விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் இந்நாட்டு சக்திவலுத் தேவைக்கான அதிக பங்களிப்பை, மீள்பிறப்பாக்கச் சக்திமூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஜனாதிபதி இதன்போது  சுட்டிக்காட்டினார்.

அதற்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் திறன் வசதிககளை நாட்டுக்கு வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறும், ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தான் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தபோது, தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயங்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில், “ஜெய்க்கா” நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்புகளின் போது மிக நெருக்கமாகச் செயற்பட முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் சந்தை மற்றும் விவசாயத்துறையின் முன்னேற்றத்துக்குப் பங்களிப்பு வழங்குவதாக, இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் பொஜ் ஹான்பொல் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் சன்டில் எட்வின் ஆகியோர் குறிப்பிட்டனர்.

ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் 70 வருடகாலத் இராஜதந்திர உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிஸுகொஷி, அந்த உறவுகளை உறுதியுடன் முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: