இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமரிடம் சுவிஸ் அரசு உறுதிமொழி !

Tuesday, June 29th, 2021

இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கிவைத்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நேற்றையதினம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பர்க்லர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து குறித்த நன்கொடையை வழங்கிவைத்திருந்ததுடன் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றையுளும் மேற்கொண்டிருந்தார்.

இந்நன்கொடை தொடர்பில் சுவிட்சர்லாந்து மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் வலுவான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

இலங்கை – சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்பு சங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியம், கடந்த காலங்களில் இரு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வெற்றிகரமாக காணப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது இலங்கை – சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்தவிடம் அதற்கான பொறுப்பை பிரதமர் ஒப்படைத்தார்.

சுற்றுலாத்துறையை எதிர்காலத்தில் மிக விரைவில் புத்துயிர் பெறச்செய்யும் தற்போதைய உலக எதிர்பார்ப்பின் படி இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என தூதர் டொமினிக் ஃபர்க்லர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பிராணவாயு செறிவு கருவி மற்றும் மரபணு சோதனை அமைப்பு உள்ளிட்டவை இந்த மருத்துவ உபகரண தொகுதியில் உள்ளடங்குகின்றன. இதேவேளை, கொரோனா சவாலை வெற்றிக்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னேஷியோ கெசிஸ், அனைவரும் ஒன்றாக ஒன்றிணைவதன் மூலம் மாத்திரமே தொற்றை முற்றாக ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டியிருந்ததுடன் அதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அத்தியவசியம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: