இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று ?
Tuesday, April 4th, 2017இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாத காலத்தில், நாடு முழுவதும், 500ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் எச்.1 என்1 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று மாத காலத்தில், இரு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 மரணங்கள் பதிவாகியுள்ளன. 115 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில், மாத்தளை மாவட்டதில் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை அதிக மரணங்கள் கண்டி மாவட்டத்திலே அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டம் – 40 பேர் , மாத்தளை மாவட்டம் – 73 பேர், நுவரெலியா மாவட்டம் – 02 என மொத்தம் 115 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனம் காணப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 12 மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த தகவல்களை உறுதிப்படுத்திய மாகாண சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் டாக்டர் சாந்தினி சமரசிங்க, “கர்ப்பிணிகள், முதியவர்கள், நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கவனத்துடன் இருக்க வேண்டும் ´´ என்கின்றார்.
´குறித்த வகையினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்படும் போது மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து உண்டு´´ என்றும் சுட்டிக்காட்டிய அவர் ´´ சுகதேகியான ஒருவருக்கு இந் நோய் ஏற்பட்டால் சாதாரணமாக குணமாகிவிடும் ´ என்கின்றார்.
Related posts:
|
|