இலங்கையில் தலை சிறந்த பொறியியலாளர்களை உருவாக்குவது யாழ்ப்பாணமே : பிரதமர் பெருமிதம்!

Monday, August 6th, 2018

வடமாகாணத்தில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முக்கிய விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறையில் துறைமுக அபிவிருத்திக்கான திட்டம் என்பனவும் இதில் முக்கிய பங்கினை வகிப்பதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கையின் பொறியியல் துறையில் தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்தே உருவாகியதாகவும் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்து உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடம் மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளுக்காக 500 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. வடக்கில் பல மனிதாபிமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க சமகால நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது படையினரிடம் உள்ள காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. 30 வருடகால யுத்தம் வடக்கையும், தெற்கையும் வெகுவாக பாதித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னரே வியட்நாம் அபிவிருத்தியடைந்தது. அதேபோல் நாம் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இடைக்காலத்தில் இருக்கின்றோம் என்றார்.

Related posts: