இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் – பேராசிரியர் நீலிகா மலவ்கே எச்சரிக்கை!
Tuesday, August 24th, 2021இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒளிபரப்பிய விசேட நிகழ்வொன்றில் பங்கேற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டெல்டா வகையின் முன்னர் அறிவிக்கப்பட்ட மூன்று பிறழ்வுகள் ஒன்றாகக் காணப்பட்ட உலகின் ஒரே நாடு இலங்கையாகும் என்றும் தற்போது கூடுதலாக புதிய மாறுபாடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இந்த மரபணு மாற்றங்கள் எவ்வளவு தூரம் பரவியது என்பதை அடையாளம் காண இந்த வாரம் மேலும் மரபணு வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில மாதிரிகள் இரண்டு சர்வதேச ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு அதனை மேலும் ஆய்வு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மைய நாட்களில் பரிசோதிக்கப்பட்ட 88 மாதிரிகளில், 4 மாதிரிகள் மட்டுமே அல்பா பிறழ்வு என்றும் ஏனைய அனைத்தும் டெல்டா பிறழ்வு என சுகாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் மட்டுமல்லாது உலகளவில் டெல்டா வியாபித்துள்ளதென்றும் அதனால்தான் பல நாடுகள் முடக்கத்தை மீண்டும் விதிக்க வேண்டியிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கையில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு நாளைக்கு சுமார் 6000 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200ஐக் கடக்கும் என்றும் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
டெல்டா மாறுபாட்டால் ஏற்படும் தற்போதைய அழிவு, மக்கள் தொகையில் பெரும் சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி போடப்படும் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால்தான் அதிகாரிகள் தடுப்பூசிகளை சீக்கிரம் வழங்க முயற்சிப்பதாகவும் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|