இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் – பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021

கொரோனா தடுப்புக்கான சினோபார்ம் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீன நிறுவனம், இலங்கையில் தடுப்பூசி மருந்தை நிரப்பும் தொழிற்சாலையை அமைப்பதில் ஆர்வம் காட்டிவருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினோபார்ம் குழுமத்தின் தலைவர் லியு ஜிங்ஷென் இலங்கையில் தடுப்பு மருந்தை நிரப்பும் ஆலையை அமைப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தூதுவர் பாலித கொஹன்ன, சினோபார்ம் குழுமத் தலைவர் லியு மற்றும் மூத்த நிர்வாக குழுவினரை  சந்தித்தபோது, இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அனுப்பப்பட்ட தனிப்பட்ட கடிதத்தை சினோபார்ம் குழுமத் தலைவரிடம் கையளித்துள்ளார்.

சினோபார்ம் குழுமம் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்து தடுப்பூசிகளை வழங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இலங்கையின் சாதகமான வர்த்தக அணுகலைப் பயன்படுத்திக்கொள்ள, இலங்கையில்  தடுப்பூசி மருந்தை நிரப்பும் ஆலையை நிறுவுவதில் அவர் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: