இலங்கையில் கலப்பு தேர்தல் முறைக்கு நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

இலங்கையின் தேர்தல்களில் கலப்பு முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழு, இந்த பரிந்துரையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுாராட்சி, மாகாண மற்றும் பொதுத் தேர்தல்களில் பெண்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது மாத்திரமன்றி, இளைஞர்களின் அதிக பிரசன்னத்தையும் உறுதிப்படுத்தும் பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் செலவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் தேர்தல் பிரசாரங்களின் செலவுகளை கட்டுப்படுத்தும் பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் மோசடிகளை தடுக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. அரச சொத்துக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்களை கொண்டு வருவதற்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்களிப்பு முறையை விரைவுப்படுத்தல் மற்றும் தேர்தல் முடிவுகளை விரைவில் அறிவித்தல் செயற்பாடுகளுக்காக நவீன முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் முறையை இலகுப்படுத்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சிரேஸ்ட அரச சேவையாளர்களுக்கு இருக்கும் தடைகளை நீக்கும் பரிந்துரையையும் நாடாளுமன்ற செயற்குழு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடம் சென்று அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெயர் சேர்க்கப்படாவிட்டால், ஜூலை 12ஆம் திகதிக்கு முன்னதாக 011 2860 032என்ற எண்ணுக்குத் அறியத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|