இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது கொரோனா தொற்று : நாளாந்தம் நாடு முழுவதும் 6000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை –- தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!
Saturday, May 2nd, 2020இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச மற்றும் தனியார் துறையில் உள்ள 15 ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை உடனடியாக வழங்குமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பமாக உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் முன்னர் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் நீண்ட முயற்சிகளின் பலனாக யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் நோக்கில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்து வந்தோம். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது என்றார்.
இதனிடையே ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17ஆம் தேதி அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வீடு திரும்பினார்.
இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளி பி.சி.ஆ பரிசோதனைக்கு மீண்டும் உட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என அறிவிக்ப்பட்டுள்து.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 172 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 690 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 511 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|