இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் – இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!
Sunday, October 15th, 2023இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆற்றல் சக்திகளை மையப்படுத்திய குழாய் இணைப்புகள் மற்றும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குதல் என்பவற்றில் இருதரப்பு செயற்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகு சேவை ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்றிருந்த நிலையில், நிகழ்நிலை ஊடாக உரையாற்றியபோதே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு சேவை தொடங்கப்படுவதானது இலங்கை – இந்திய மக்களிடையேயான தொடர்புகளுக்கு முக்கியமான ஒன்றாகிறது.
பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகவே இது உள்ளது. பிரதமர் மோடி அரசாங்கத்தின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் உள்ளவர்களுக்கு உதவியுள்ளமை இந்த படகு சேவை மூலம் வெளிப்பட்டுள்ளது.
அயலகத்துக்கு முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கையுடன் இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நெருங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு தாராளமாக உதவ முடிகிறது. இதைத்தான் இந்தப் படகு சேவை வழியாகச் செய்ய முயல்கிறோம். இவ்வாறானதொரு முயற்சியின் பயனை பிரதமர் மோடி ஏற்கனவே அனுமதித்த சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவைகளில் வெளிப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைவரின் நலனிலும் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழ்நாட்டை தனது இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருக்கும் பிரதமரின் இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, யாழ்ப்பாணத்துக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதை யாரும் மறக்க முடியும்.
இதன் மூலம் இலங்கையில் வீடமைப்புத் திட்டங்கள், கலாசார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான வாய்ப்புகளுக்கு வழிவகுத்தன. எதிர்காலத்தில் ஆற்றல், சக்திகளை மையப்படுத்திய குழாய் இணைப்புகள் மற்றும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்தியுள்ளோம்.
இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கு ஆதரவு வழங்குவோம்.
தொடர்புடைய இரண்டாவதாக, கடல் சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பேரிடர் ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இலங்கையுடன் மீண்டும் செயலில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த படகு சேவை மக்களிடையே கடல்சார் களத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் சுமுகமாக இயங்குவதற்கு இந்தியா வழங்கிய உதவிகளையும் இது கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், இந்த படகு சேவை நேரடியாக சரக்கு சேவைகளை எளிதாக்கும். குறிப்பாக, சிறு வணிகத்துக்கு உதவும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|