இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : அடுத்த வாரத்தில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்ப்பு – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவு இல்லை!

Monday, April 6th, 2020

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 8 பேர் தொடர்பான தகவல்களை சுகாதார துறை பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.

நாட்டில் உறுதி செய்யப்பட்ட கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றிரவு வரை 176 வரை அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரையில் புதிதாக 12 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களில் 8 பேர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய நபர் மாத்தறை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொரோனா நோயாளி ஒருவருடன் நெருக்கமாக செற்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவர் அவர்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. மற்றைய நபர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

இதனிடையே எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் நாட்டில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் பயண மட்டுப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றினால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அதிகளவு கட்டுப்படுத்தலாம் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நோய் அறிகுறி தென்படாத சிறார்களுக்குள் கொரோனா வைரஸ் காணப்படக் கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மட்டும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 138 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதேநேரம், 33 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா தொற்று தொடர்பாக நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் எவருக்கும் குறித்த நோய் இருப்பது பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வைத்தியசாலைக்கு வெளியே அரியாலை, கொழும்புத்துறை, குருநகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 12 பேருக்கும் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 12 பேரும் குறித்த அரியாலை போதகரருடன் நெருங்கிய தொடர்பை பேணியதனால் இவர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவேளை  அரநாயக்க மற்றும் யாழ்ப்பாணம் மந்திகை ஆகிய பகுதிகளில் இருவர் சந்தேகக்கிடமான முறையில் இன்று உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக குறித்த நபர்கள் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள வாகன திருத்தல் நிலையம் ஒன்றில் பணிபுரிந்த அரநாயக்க பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் வீட்டில் இருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது கேகாலை வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரநாயக்க பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை, யாழ்ப்பாணம் மந்திகை பகுதியில் கொரோனா வைரஸினால் பீடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

52 வயதான சுமித் பிரேமச்சந்திர என்பவரே இன்று காலை மெல்போர்னில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றை மன தைரியத்துடன் எதிர்கொள்வதன் மூலம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: