இலங்கையிலும் 188 அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை – மன்னாரில் முடக்கப்பட்டது தாராபுரம் கிராமம்!

Wednesday, April 8th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் 6 பேர் குறித்த நோய்த்’தொற்றால் உயிரிழந்த நிலையில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதுடன் அவர் அடுத்த வாரமளவில் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்..

கடந்த மார்ச் 22ம் திகதி விவேகானந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விவேகானந்தன் தற்போது உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா நோயுடன் இலங்கை வந்த சுவிஸ் போதகரை தொழில் நிமித்தம் சந்திக்க சென்ற வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று சந்தேக நபர்களுக்கான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பதினெட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனாவைத்தியாசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் 20 பேருக்கும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலைமுதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கூறுகையில் –

கடந்த மாதம் 18ஆம் திகதி மன்னார், தாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்கு சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. அவர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அதற்கு பின் 18ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்கு சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 கிராமங்களில் 25000 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பேருவளையில் முதன்முறையாக கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருன சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த பிரதேசத்தில் 900க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்க நாள் இலங்கையில் நோய் அபாயம் காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சேவையாற்றும் திடீர் மரண விசாரணையாளர்களுக்கு பாதுகாப்பு  உடையினை  வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென  திடீர்மரண விசாரனையாளர்கள் சங்கத்தின் தொடர்பு அதிகாரி  மொகட் பசிர் தெரிவித்துள்ளார் ஹட்டனனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. யாழ்.குடாநாட்டிலிருந்து கடல்வழியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையில் மக்கள் நடமாடுவதாக வெளியான தகவலையடுத்து இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத் தியிருக்கின்றனர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது முழுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அவ்வப்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான அனுமதியினைஅரசாங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: