இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் வருகை – இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் கைச்சாத்து!

Sunday, January 21st, 2024

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3 ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார்.

இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். 

இதன்போதே சுதந்திர தினத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமரை அழைத்துள்ளமை குறித்து தகவல் வெளியிட்டார்.

மேலும் இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை சுதந்திர தினத்தினை ‘புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: