இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகின்றது – அதை வலுச்சேர்க்க 8,150 கோடி ரூபாவை விடுவிப்பதற்கு உலக வங்கி தீர்மானம்!

இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதார மறுசீரமைப்பு சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுவதால், தொடர்ந்தும் பயணிப்பதற்கு வலுசேர்க்கும் வகையில் இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்’ அதாவது சுமார் 8,150 கோடி ரூபாவை விடுவிப்பதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
உலக வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ள 500 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தின் இரண்டாவது தவணையாக, இந்த 250 மில்லியன் டொலரை விடுவிப்பதற்கு உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
வரவு – செலவுத் திட்ட ஒத்துழைப்பு வேலைத் திட்டமாக பெயரிட்டு இந்த வேலைத் திட்டத்துக்காக கடந்த ஜூன் 28 இல், அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து அதன் இரண்டாவது தவணையை இவ்வாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில், இந்த நிதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் வறுமை மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கான அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தனியார்துறைக்காக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்போது அரசாங்கம் திருப்திகரமான முன்னேற்றத்தை பெற்றுள்ள நிலையில் பொருளாதார கொள்கை வரைபு முறையானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகளை பலப்படுத்துதலை இலக்காகக் கொண்டு விசேட சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டே இரண்டாவது தவணை வழங்கப்படுமென உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|