இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க!

Wednesday, July 20th, 2022

    

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், புதிய ஜனாதிபதி  தெரிவு செய்யப்பட்டுள்ளார்

நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமாக பதிவான 223 வாக்குகளில் 4 நிராகரிக்கப்பட்ட நீங்கலாக 219 வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அவற்றில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் அநுர குமார திசாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

1993 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக, அப்போதைய பிரதமராக பதவி வகித்த டீ.பி.விஜேதுங்க நாடாளுமன்றினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர், இடம்பெற்ற அடுத்துவரும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில்,  வேறு எவரும் ஜனாதிபதி பதிவிக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யாமையால், டீ.பி.விஜேதுங்க போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 

இதையடுத்து, ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்படும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ள போதிலும், வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது விசேட அம்சமாகும்.

8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்காக, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும், போட்டியிட்டுள்ளனர்.

Related posts: