இலங்கையின் சுயாதீனதன்மை ஜெனிவாவில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்படாது – பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, February 8th, 2021

எத்தகைய நெருக்கடிநிலை ஏற்பட்டாலும் ஜெனிவாவில் நாட்டின் இறைமையும் சுயாதீனத் தன்மையை விட்டுக் கொடுக்கப்படமாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

பௌத்த சாசனத்தை முன்னிலைப்படுத்தி அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நன்மைக்கு சர்வ மதங்களின் ஆசிர்வாதம் அவசியமாகும். அனைத்து மதத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால் பௌத்த சாசனத்துக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டது. இதனால் கடந்த காலங்களில் மதங்களுக்கிடையில் பாரிய பிணக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பௌத்த சாசனத்தை பாதுகாக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ராஜபக்ஷ பெயருடன் தொடர்புடையவர்களையும், எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளையும் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தியது. பௌத்த மதத்துக்கும், பௌத்த மத தலைவர்களுக்கும் எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

30 வருட கால யுத்தம் பொருளாதாரம், சமுகம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முடிக்க முடியாது என்று குறிப்பிட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய காலத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதாரம் ஆகியவற்றை ஒருசேர முன்னேற்றமடைய செய்தோம்.

யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது. நாட்டின் சுயாதீனத்தன்மைக்கான நெருக்கடியான பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

நாட்டின் உரிமையை நாட்டு மக்களுக்கே வழங்குவோம். தற்போதும் கூட நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சுயாதீன முறையில் தீர்மானம் எடுத்துள்ளோம். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.

ஆகவே மத தலைவர்கள் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆட்சியை நல்வழிப்படுத்த தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: