இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு! – சம்பிரதாய முறைகளைவிட மருத்துவ ஆலோசனைகளுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும்!

Sunday, April 12th, 2020

மேலும் 5 கொரோன வைரஸ் தொற்றாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதாக  சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட ஐந்து பேரில் நான்கு கொரோனா நோயாளர்கள் பேருவளையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் புனானி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுளள்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேல்மாகாணத்தில் மட்டும் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவால் வெளியிடப்பட்ட ‘கொவிட் -19’ நாளாந்த நிலைவர அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 45 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 27 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 22 பேரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும், யாழ்ப்பாணத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் கண்டி மாவட்டத்தில் 7 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும் , குருணாகலையில் மூவரும் , மாத்தறையில் இருவரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 7 போர் குறித்த நோயின் தாக்கம் காரணமாக பலியாகியுள்ளனர்.

இதேவேளை கொரோன வைரஸ் தொற்றாளி ஒருவர் இன்றும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பம் முதல் அவர்களின் அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தான் அறிந்த அளவிற்கு பாதுகாப்பு புலனாய்வு பிரிவினை, கொரோனா கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் முதலாவது மற்றும் ஒரே நாடு இலங்கையாக தான் இருக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக புலனாய்வு பிரிவின் அனைத்து அதிகாரிகளும் தூங்காமல் செயற்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கிராம புறங்களில்  பண்டிகை கொண்டாட்டங்களை மேற்கொள்ள தயாராக மக்கள் உள்ளதால் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல் துறை மா அதிபர் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனிடையே பிறக்கவிருக்கும் புத்தாண்டில் சம்பிரதாய முறைகளுக்கு அன்றி, மருத்துவ ஆலோசனைகளுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வெடருவே உப்பாலி தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர் புதுவருடத்தின்போது சம்பிரதாய நடைமுறைகளை நிறைவேற்றும்போது, பொதுமக்கள் வரையறைகளுடன் செயற்பட வேண்டும் எனவும் மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊரடங்கு நேரத்தில் இலங்கை முழுவதும் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், நுகர்வோரிடமிருந்து வரும் அறிகுறிகளுக்கு எந்தவொரு மருந்தையும் பரிந்துரைக்கவோ விற்கவோ கூடாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன் மருத்துவரின் பற்றுச்சீற்று இல்லாமல் எந்தவொரு மருந்துகளையும் வழங்கப்பட கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் பூதவுடல்களை தகனம் செய்யப்படவேண்டிய முறைமைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: