இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!

Saturday, November 13th, 2021

இலங்கையின் 9 ஆவது  நாடாளுமன்றத்துக்கான இந்திய இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கமானது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆதரவுடன் இன்றையதினம் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த அங்குரார்ப்பண கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100 க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற நட்புறவு சங்கம் ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிகளவான பிரதிநிதிகள் கலந்து கொண்டிருப்பதை இங்கு காணக்கூடியதாக இருந்ததாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த உரையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்திய இலங்கை இருதரப்பு உறவின் பலத்தினை நிரூபிக்கும் சாட்சியமாகவும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இலங்கை இந்தியா இடையிலான மிகவும் நெருக்கமான நாகரீக உறவுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மிகச் சிறந்த பரிசாக பௌத்தமதம் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் – மக்கள் தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் தனது உரையின்போது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இச்சங்கத்தின் அங்குரார்ப்பணம் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு புத்துயிரளிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

விசேடமாக, பொருளாதார பெறுமானங்களை பகிர்வதை மேம்படுத்துதல், பொதுவான சவால்களை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பு, மக்கள் – மக்கள் தொடர்புகளில் மேம்பாடு, சிறந்த பொருளாதார ஈடுபாடுகளை ஊக்குவித்தல், கலாசார தொடர்புகளை வலுவாக்குதல் மற்றும் அபிவிருத்தி பங்குடமையின் நற்பலன்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு பன்முக உறவுகளை மேலும் வலுவாக்குவதற்கு இந்த அமைப்பானது ஆதரவாக அமையும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே குறித்த அமர்வின் போது நீர்ப்பாசன அமைச்சர், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரான சமல் ராஜபக்ஷ இச்சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சங்கத்தின் துணைத் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் முறையே, செயலாளராகவும் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்ராஆராச்சி இந்த அமைப்பின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: