இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா.விற்கு கிடையாது – ஐநாவுக்கு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைப்பு!

Thursday, March 10th, 2022

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவை தனது விடயதானத்திற்கு அப்பாற்பட்டு இலங்கை மீது அழுத்தம் கொடுக்கிறது. உள்ளக பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பை ஒருபோதும் சர்வதேசத்திடம் ஒப்படைக்கமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறுகையில் –

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இலங்கைக்கு சார்பாக 31 நாடுகள் ஆதரவு வழங்கின. அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டதன் விளைவாக இக்கூட்டத்தொடர் சாதகமாக அமைந்தது.

இந்த நவீன யுகத்தில் பலம்வாய்ந்த நாடுகளினால் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு அவதானம் செலுத்தாதிருப்பது அவதானத்திற்குரியது.

இலங்கைக்கு எதிரான போலியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதனை வருடத்தில் இருமுறை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது எத்தரப்பினருக்கும் சாதகமானதாக அமையாது எனவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தில் 80 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதிகார பகிர்வு, அரச நிர்வாகம் ஆகியவற்றில் தலையிடும் அதிகாரம் ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு கிடையாது எனவும் கூறியுள்ளார்.

ஐ. நா மனித உரிமை பேரவை தனது விடயதானத்திற்கு அப்பாற்பட்டு இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கிறதாகவும், உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க முடியாது என்ற இலங்கையின் நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை சேகரிக்க செலவழிக்கும் பல பில்லியன் டொலர் நிதியை கொவிட் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு முடியாமலும், தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாமலும் உள்ள நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குமாறு பேரவையில் தாம் கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: