இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Thursday, August 20th, 2020

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன பொறுப்பேற்றுள்ளார். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் சார்பாக சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஏகமனதாக புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்திருந்தார்.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பரமாணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து 9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் சபை முதல்வராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றுக்கொண்டார். இதேவேளை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடமையினை பொறுப்பேற்றார்.

இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறாது என்றும் மாறாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக முப்படையினரின் பங்களிப்புடனான கலாசார நடனம் இடம்பெற்றது.

அதன்படி முதல் நிகழ்வாக பிற்பகல் 2.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெற்றது.  அதன் பின்னர் புதிய சபாநாயகரின் வருகையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையும் அதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையும் இடம்பெற்றது.

புதிய சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஜெய மங்கள கீதம் இசைக்கப்பட்டு ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட்டது..

அதன் பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர் சபாநாயகர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தை பிற்பகல் 3 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்

அதன் பின்னர், அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்தினார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி இன்றைய நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை எவ்வாறிருப்பினும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஒருவருக்கு வாய்ப்பு காணப்பட்டது.

எனினும் பொதுத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்  குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: